ஊரடங்கால் கொடைக்கானல் வெறிச்சோடியது: சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மலைப்பாதையில் திரியும் வனவிலங்குகள்

ஊரடங்கு உத்தரவால் கொடைக்கானல் வெறிச்சோடியது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், மலைப்பாதையில் வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. எனவே பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-04-18 22:15 GMT
கொடைக்கானல்,

இளமை பொங்கும் பசுமை ஆடையை அணிந்ததால் ‘மலைகளின் இளவரசி’ பட்டம் சூடியது கொடைக்கானல். கொடைக்கானலில் இயற்கை அன்னை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுத்திருப்பதை மறுக்க முடியாது. திரும்பி பார்க்கும் திசைகளில் எல்லாம் கண்களை குளிர வைக்கும் பல வண்ண பூக்கள் நம்மை வரவேற்கும்.

வானத்தை தொட்டு விட வேண்டும் என்ற ஆவலில் ஓங்கி உயர்ந்திருக்கும் மரங்கள் நம்மை வியக்க வைக்கும். பறவைகளின் கீச்சிடும் சத்தம் காதுகளுக்கு இனிமை தரும். கொடைக்கானல் மலைப்பாதையில் பயணிக்கும் போதே, சிலுசிலுவென வீசும் காற்றால் நம் மனம் மெய்மறந்து போய்விடும்.

பசுஞ்சோலையாக காட்சியளிக்கும் கொடைக்கானல் அரிய வகை பறவைகள், விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டது. இந்த மலைப்பகுதியில் காட்டெருமை, மான், யானை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை பறவைகளும் உள்ளன. இவை அவ்வப்போது சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலைகள் குடியிருப்பு பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் எவ்வித அச்சமும் இன்றி வனவிலங்குகள் பொது இடங்கள், சாலைகள், தெருக்களில் உலா வருகின்றன.

கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை கிராமப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி போக்குவரத்து அதிகமுள்ள பிரதான மலைப்பாதைகள், தெருக்கள், வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் காரணமாக மலைப்பாதையை அவ்வப்போது யானைகள் கடந்து செல்கின்றன. இரவில் மலைக்கிராம தெருக்களிலும் வலம் வருகின்றன.

குரங்குகள், மந்திகள் உணவுக்காக மலைப்பாதையில் முகாமிட்டுள்ளன. போக்குவரத்து இல்லாத நிலையில் அமைதியான சூழல் நிலவுவதால் மயில், மான், காட்டுப்பன்றிகள் மலைப்பாதையில் உலா வருவதுடன், கூட்டம், கூட்டமாக படுத்து கிடக்கின்றன. குறிப்பாக மலைப்பகுதியில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. கொடைக்கானல் நகரின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, கான்வென்ட்ரோடு, பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் தினமும் காட்டெருமைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களால் ஏற்படும் புகை மாசு குறைந்தும், சுற்றுலா பயணிகளால் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் இன்றியும் மலைப்பகுதி இயற்கைக்கு முழுமையாக திரும்பி வருகிறது. கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளை மெல்ல, மெல்ல வனவிலங்குகள் முழுமையாக பயன்படுத்த தொடங்கி விட்டன. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதி வனவிலங்குகளின் புகழிடமாக மாறி வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்