ஒரேநாளில் 30 பேர் சிகிச்சைக்காக அனுமதி பொள்ளாச்சியை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு கொரோனா
பொள்ளாச்சியை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரேநாளில் தொற்று சந்தேகத்தில் 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட முடிவுகள் வரவில்லை. இந்தநிலையில் நேற்றைய மருத்துவ பரிசோதனையில் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.குமாரபாளையத்தை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்கள் வீடு அருகே வசித்து வந்ததால் சிறுவனுக்கு இந்த தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறுவன் வசித்த பகுதிக்கு செல்லும் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவனின் பெற்றோர் உள்பட பலருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128. மொத்தம் 277 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆண்கள்-150, ஆண் குழந்தைகள்-12, பெண்கள்-102, பெண் குழந்தைகள்-13. மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் 128 பேருக்கு வரவேண்டியது உள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் மொத்தம் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள்-18, ஆண் குழந்தைகள்-2, பெண்கள்-8, பெண் குழந்தைகள்-2 ஆவார்கள். இதில் 17 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 13 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தும், கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டும் மொத்தம் 13 பேர் வீடு திரும்பி உள்ளனர். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.