மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரைச்சீட்டு இன்றி மருந்துகள் விற்றால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை
மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரைச்சீட்டு இன்றி மருந்துகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரைச்சீட்டு இன்றி மருந்துகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்சுலின் ஊசிகள் அதிகளவில் விற்பனை
கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு உள்ளதால் மளிகை கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றுக்கு நேர கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் அரசு அறிவுறுத்தலின் பேரில் காலை முதல் இரவு வரை மருந்து கடைகள் செயல்பட்டு வருவதை காண முடிகிறது. அங்கு மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகமான அளவில் இருக்கிறது. அதிலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்துகள் அதிகளவில் விற்பனையாகிறது. அதிலும் இன்சுலின் ஊசிகள் அதிகளவு விற்பனையாகிறது.
காய்ச்சலுக்கு மருந்து வழங்கப்படாது
சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் இங்கு மருந்து வழங்கப்படாது. மாறாக அரசு மருத்துவமனைக்கு செல்லவும் என தாந்தோணிமலை மெயின்ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருந்து கடைகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அத்தியாவசிய தேவையெனில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு மருந்து கொடுத்து சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணை வாங்கி கொண்டு அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்கள். மேலும், டாக்டர்கள் பரிந்துரைச்சீட்டு இன்றி வருபவர்களுக்கு மருந்துகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், மக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து பிஸ்கட், பிரட் உள்ளிட்டவையும் கூட மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. சில இடங் களில் ரீசார்ஜ் செய்யும் பணி கூட நடக்கிறது. தற்போது கொரோனாவால் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டிருப்பதால், காலை மாலை வேளையில் வீட்டின் அருகேயும், தெருக்களிலும் உடல் ஆரோக்கியத்தை பேண பலரும் நடைபயிற்சி மேற்கொள்வதை காண முடிகிறது. உடல் பருமன் அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்காக பலரும் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். அதன் பேரில் உடல் ஆரோக்கியத்திற்காக கேழ்வரகு, கோதுமை, கம்பு உள்ளிட்ட தானியங்களை பலரும் வாங்கி உணவில் பயன்படுத்துவதை காண முடிகிறது.