முடங்கி கிடக்கும் பொதுமக்கள் வீடுகளில் தின்பண்டங்கள் செய்வதால் தேங்காய் தேவை அதிகரிப்பு

வீடுகளில் முடங்கி கிடக்கும் பொதுமக்கள், தின்பண்டங்கள் செய்வதால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. கிராமங்களுக்கு நேரில் சென்றும் வாங்குகின்றனர்.

Update: 2020-04-19 04:12 GMT
கரூர், 

வீடுகளில் முடங்கி கிடக்கும் பொதுமக்கள், தின்பண்டங்கள் செய்வதால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. கிராமங்களுக்கு நேரில் சென்றும் வாங்குகின்றனர்.

தேங்காய் விற்பனை

கரூர் மாவட்டத்தில் தேங்காய் வியாபாரிகள் மட்டையுடன் கூடிய தேங்காய்களை வாங்கி வந்து, குடோனில் வைத்து கடப்பாரை மூலம் மட்டையை உரித்து கரூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், மாயனூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் கடைகளில் வாங்குவதை விட, குடோனுக்கு வந்து 5 முதல் 10 தேங்காய்களை மொத்தமாக வாங்கி செல்வதை காண முடிகிறது. ஒரு தேங்காய் ரூ.10, ரூ.15, ரூ.20, ரூ.25, ரூ.30 ஆகிய விலைக்கு அளவுக்கு ஏற்றாற்போல் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வியாபாரிகள், கடைக்காரர்களும் இங்கு வந்து தேங்காய்களை கொள்முதல் செய்து, கொண்டு போய் கூடுதலாக ரூ.5 வரை விலை வைத்து விற்கின்றனர்.

தேவை அதிகரிப்பு

இதுகுறித்து தாந்தோணிமலை தேங்காய் வியாபாரி கூறுகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து மட்டையுடன் கூடிய தேங்காய்களை வாங்கி, வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வருகிறோம். ஊரடங்கால் போக்குவரத்து கட்டுப்பாடு, மரத்தில் இருந்து தேங்காய் பறிக்க ஆள் இல்லாமை உள்ளிட்டவற்றால் வரத்து குறைவாகவே உள்ளது. தற்போது கொரோனாவால் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், பக்தர்கள் வாங்கி செல்லும் தேங்காய் விற்பனை சுத்தமாக இல்லை. மாறாக கொரோனாவால் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருப்பதாலும், கடைகள் இல்லாததால் பெரும்பாலான வீடுகளில் திண்பண்டங்கள் செய்ய ஆரம்பித்துள்ளதாலும் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேங்காய்களை வெளியிடங்களில் இருந்து எவ்வித தடையுமின்றி கொள்முதல் செய்து கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் வாங்கல், நெரூர், சோமூர், கோயம்பள்ளி, குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று, தேங்காய், இளநீரை வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்