கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் தேங்கி கிடக்கும் மக்காச்சோளம் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை

ஊரடங்கு உத்தரவினால் கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகள் வராததால் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தேங்கி கிடக்கிறது.

Update: 2020-04-19 03:10 GMT
பெரம்பலூர், 

ஊரடங்கு உத்தரவினால் கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகள் வராததால் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தேங்கி கிடக்கிறது. இதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் சிறப்பிடம்

மக்காச்சோளம் உற்பத்தியில் ஆண்டுதோறும் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. ஆற்றுப்பாசனம் இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் கடந்த ஆண்டு இறுதியில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து தடைபட்டதாலும், வெளியூர் வியாபாரிகள் வராததாலும் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் விற்கமுடியாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து பெரம்பலூர் தாலுகா அய்யலூர் குடிக்காட்டை சேர்ந்த விவசாயி அழகுமுத்து கூறியதாவது:-

கடந்த ஆண்டு இறுதியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் இருந்தாலும், அதனை பூச்சி மருந்து அடித்து கட்டுப்படுத்தியதால், ஓரளவுக்கு உற்பத்தி கிடைத்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் மக்காச்சோளத்தை அறுவடை செய்ய தொடங்கினோம். அப்போது வியாபாரிகள் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை ரூ.1,800 வரை விலைபேசி கொள்முதல் செய்தனர். அதன்பிறகு ரூ.1,350-க்கும், பின்னர் ரூ.700-க்கும் கேட்டனர். தற்போது ஊரடங்கு உத்தரவினால், வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் வீட்டிலேயே தேங்கி கிடக்கிறது.

நஷ்டம்

தேக்கி வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் பூச்சி ஓட்டை போடுவதால், செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது. ஊரடங்கு உத்தரவினை காரணம் காட்டி, உள்ளூர் வியாபாரிகள் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய சொற்ப விலைக்கு பேரம் பேசுகின்றனர். தமிழக அரசு நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உள்ளது போல், குறைந்தபட்ச ஆதார விலையை மக்காச்சோளத்திற்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இதேபோல் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பருத்தியும் வீட்டிலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆமணக்கிலும் பல்வேறு பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டதால், விவசாயிகளுக்கு ஆமணக்கு உற்பத்தி கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்