ஊரடங்கால் குமரியில் கீரை விலை கடும் வீழ்ச்சி ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனை

ஊரடங்கு உத்தரவு காரணமாக குமரி மாவட்டத்தில் கீரை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2020-04-19 01:24 GMT
நாகர்கோவில், 

ஊரடங்கு உத்தரவு காரணமாக குமரி மாவட்டத்தில் கீரை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கீரை வகைகள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டி இருப்பதால் சிக்கனம் கருதி பெரும்பாலான தேவைகளை குறைத்து வருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு உணவு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் வாழைத்தார்கள் மற்றும் பழ வகைகள் தேக்கம் அடைந்திருக்கிறது. அவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது கீரை விலையும் கடும் சரிவை சந்தித்து உள்ளது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் உள்ளிட்ட பெரிய சந்தைகளில் கீரை வியாபாரம் படுஜோராக இருக்கும். நாகர்கோவிலில் வடசேரி சந்தையில் மட்டும் அல்லாது சாலையின் இருபுறமும் உள்ள நடைமேடைகளிலும் கீரை வியாபாரம் நடக்கும். அங்கு தினமும் காலை வேளையில் கீரை, வாழைத்தண்டு, வாழைப்பழம், முருங்கைக்காய் மற்றும் வாழைப்பூ உள்ளிட்ட உணவு பொருட்களை வியாபாரிகள் மட்டும் அல்லாது விவசாயிகளே நேரடியாக வந்து விற்பனை செய்வார்கள். ஊரடங்கு காலத்திலும் காலை வேளையில் வழக்கம் போல் வடசேரி பஸ் நிலையத்தில் கீரை வியாபாரம் நடக்கிறது.

விலை குறைவு

கீரை வகைகளை பொறுத்த வரையில் தண்டங்கீரை, வெந்தய கீரை மற்றும் அகத்திக்கீரை உள்ளிட்ட வற்றின் வியாபாரம் மும்முரமாக நடக்கும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள தால் கீரை வகைகள் அதிகமாக வரத்து உள்ளது.ஆனால் விற்பனை குறைவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் குறைந்த விலையில் கீரைகளை விற்பனை செய்கின்றனர். எனவே கீரை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுபற்றி வியாபாரிகளிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் விளையக் கூடிய தண்டங்கீரை, வெந்தயக்கீரை மற்றும் அகத்திக்கீரை ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. வழக்கமான காலத்தில் தண்டங்கீரை (ஒரு கட்டு) 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இதே போல அகத்தி கீரை 20 ரூபாய்க்கும், வெந்தய கீரை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்வோம். ஆனால் தற்போது அனைத்து கீரை வகைகளும் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணமானது கீரையை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரும் செலவுக்கே போதுமானதாக இல்லை“ என்றனர். கீரை விலை குறைவு காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்