ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தினமும் 102 பேருக்கு கொரோனா பரிசோதனை
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தினமும் 102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தினமும் 102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோரிக்கை
குமரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வர 24 மணி நேரத்துக்கு மேல் ஆனது. அதற்கு காரணம், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகம் மூலம் நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டி இருந்தது.
இதனால் குமரி மாவட்ட மக்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் கொரோனா பரிசோதனை மையத்தை குமரி மாவட்டத்திலேயே அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
ரூ.40 லட்சத்தில்...
இதை அறிந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சுமார் ரூ.40 லட்சம் செலவில் கொரோனா மற்றும் பிற வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களை கண்டறிந்து உறுதி செய்யும் வைராலஜி பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் கடந்த 13-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் சுதா தலைமையில் டாக்டர்கள் மற்றும் ரத்த பரிசோதனை செய்பவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த பரிசோதனை மையத்தில் ஒரு பி.சி.ஆர். எந்திரம், இரண்டு பி.எஸ்.எல்.2 கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
15 மணி நேரம் இயங்குகிறது
இந்த மையம் தேவைப்படும் பட்சத்தில் 24 மணி நேரமும் இயக்கப்படும். தற்போது 3 ‘ஷிப்டுகளாக 15 மணி நேரம் இயங்குகிறது. ஒரு ‘ஷிப்டு என்பது 5 மணி நேர கணக்காகும். நாள் ஒன்றுக்கு 15 மணி நேரத்தில் 102 பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ள முடியும். கடந்த 3 நாட்களில் 250 சளி மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சளி மற்றும் ரத்த மாதிரிகள் குறைவாக இருந்ததால் 250 மாதிரிகள் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிகமாக வரும் பட்சத்தில் அதற்கு தகுந்தாற்போல் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சளி மாதிரிகள்
தற்போது சுகாதாரத்துறையினர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக 600-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில தினங்களில் சளி மாதிரிகள் சேகரித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானோர் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுடன் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சளி மற்றும் ரத்தம் மாதிரிகளில் 110-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி இருந்தது. அவையும் வந்து விட்டது. அதிலும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. தற்போது சேகரிக்கப்படும் சளி மற்றும் ரத்த மாதிரிகள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. புதிய ஆய்வகம் என்பதால் சிறிது காலதாமதம் ஆகிறது. ஒன்றிரண்டு நாட்களில் வேகமாக பரிசோதனை முடிவுகள் வந்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.