கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரத்தை சேர்ந்த மொத்த மீன் வியாபாரி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என்று முடிவு வந்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அதே மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அந்த மீன் வியாபாரி இதுவரை எங்கெங்கு சென்று வந்துள்ளார்? என்றும் அவருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர், மேலும் அவரிடம் இருந்து யார், யார் மீன்களை வாங்கிச்சென்றுள்ளனர் என்பது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
அந்த வகையில் அவருடன் தொடர்பில் இருந்த 44 பேரை முதல்கட்டமாக சுகாதாரத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்கள் 44 பேரையும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதோடு அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து அனுப்பியுள்ளனர். இந்த முடிவுகள் வந்த பிறகே யார், யார்? கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மொத்த மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த செஞ்சி நரசிங்கராயன்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த மீன் வியாபாரிகள் 3 பேரின் குடும்பத்தினரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், அறவாழி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதோடு, மேட்டு தெருவுக்கு செல்லும் பிரதான சாலைக்கு தடுப்புவேலி அமைத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.