முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது: தஞ்சையில், அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்களுக்கு அபராதம்

தஞ்சை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2020-04-19 00:23 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை, மருந்து பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக பச்சை, நீலம் மற்றும் பிங்க் ஆகிய வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை வைத்து இருப்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வந்து பொருட்கள் வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை கடந்த 16-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அடையாள அட்டை

இருப்பினும் அடையாள அட்டை இல்லாமலும், அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல் தஞ்சை மாநகரிலும் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அதன்படி தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து சோதனை நடத்தி வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று மதியம் வரை வாகனப் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. எனவே, பல இடங்களில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்களை போலீசார் நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை, ரெயிலடி பகுதியில் அடையாள அட்டை இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர்.

முழு ஊரடங்கு

ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, ஞாயிற்றுக்கிழமை மளிகை, காய்கனி, இறைச்சி உள்ளிட்ட கடைகளைத் திறக்கக் கூடாது என்றும், பால், மருந்து, குடிநீர் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்