நடக்க முடியாத மகன்கள்-உடல்நலம் குன்றிய கணவர் பிழைப்புக்கு உதவிய பெட்டிக்கடையும் மூடப்பட்டதால் உணவுக்கு தவிப்பு
பிறவியிலேயே நடக்க முடியாத 3 மகன்கள், உடல்நிலை சரியில்லாத கணவர் ஆகியோரை பராமரித்துக்கொண்டே பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பெண்.
வேதாரண்யம்,
பிறவியிலேயே நடக்க முடியாத 3 மகன்கள், உடல்நிலை சரியில்லாத கணவர் ஆகியோரை பராமரித்துக்கொண்டே பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பெண், தற்போது ஊரடங்கால் கடையும் மூடப்பட்டு விட்டதால் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்து வருகிறார்.
நடக்க முடியாத மகன்கள்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த துளசியாப்பட்டினம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ் (வயது 70). இவரது மனைவி ஜெயா (55). இவர்களுக்கு கடந்த 1984-ம் ஆண்டு திருமணம் நடந்தது. துரைராஜூக்கு ஜெயா இரண்டாவது மனைவி ஆவார்.
இவர்களுக்கு ஜெயராஜ் (32), ஆனந்த்ராஜ் (30), வெங்கடேஷ்(28) ஆகிய மூன்று மகன்கள். மூன்று மகன்களும் பிறவியிலேயே உடல் மற்றும் மன வளர்ச்சி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக படுத்த படுக்கையிலேயே உள்ளனர். துரைராஜ் ஆரம்ப காலங்களில் பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
பெட்டிக்கடை மூடப்பட்டது
பால் வியாபாரத்திற்காக சைக்கிளில் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்ததால் பால் வியாபாரம் செய்வதை நிறுத்தி விட்டார். கடந்த 2006-ம் ஆண்டு தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியின் மூலம் வசூல் செய்து கொடுத்த ரூ.1 லட்சத்தில் வீட்டின் முன்புறம் சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி மனைவி மற்றும் மகன்களை காப்பாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக துரைராஜ் உடல்நலமின்றி நோய்வாய்ப்பட்டு வருவதால் ஜெயா தனது 3 மகன்கள் மற்றும் கணவருடன் சேர்த்து காப்பாற்றுவதற்கு வாழ்வாதாரம் இல்லாமல் பெட்டிக்கடை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டமான சூழலில் நாட்களை கடத்தி வந்தார்.
உணவுக்கு தவிப்பு
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கள் குடும்பத்தினருக்கு பிழைப்பு அளித்து வந்த பெட்டிக்கடையையும் மூட வேண்டிய சூழல் ஜெயாவுக்கு ஏற்பட்டது. கடையில் அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பசியாறி வந்த இந்த குடும்பம் தற்போது கடையும் மூடப்பட்டு வருமானம் இல்லாததால் அன்றாட உணவுக்கே 5 பேரும் தவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளான ஜெயாவின் மூன்று மகன்களுக்கும் சேர்த்து மாதம் ரூ.4 ஆயிரம் அரசின் சார்பில் கிடைத்து வருகிறது. இதை வைத்துக்கொண்டு கடந்த 26 நாட்களாக ஜெயா தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.
நல்வழி கிடைக்குமா?
தனது மூன்று மகன்களையும் அரசு ஏதாவது ஒரு மருத்துவமனையில் சேர்த்து சரி செய்ய வேண்டும் எனவும், தனது கணவரும் உடல்நலம் குன்றி வீட்டில் இருப்பதால் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும், நிரந்தர வருமானத்திற்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என ஜெயா கண்ணீருடன் கூறினார்.
வறுமையில் வாடும் இந்த தாயின் சோக குரலுக்கு யாராவது செவிசாய்ப்பார்களா? அவருக்கு ஏதாவது நல்வழி கிடைக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.