கோவை மாவட்டத்தில் ஊரடங்கு: பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள்

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2020-04-18 06:55 GMT
கோவை,

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதையும் மீறி வெளியே வருபவர்களை போலீசார் தண்டனை வழங்கியும், நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர பேரிடர் மீட்புக்குழுவினரும் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கில் ஊர்சுற்றுபவர்களை தடுக்க விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடலாம் என்று அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி கோவை மாநகரில் 12 முன்னாள் ராணுவ வீரர்களும், புறநகரில் 42 பேரும் என மொத்தம் 54 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்வந்தனர்.

இதையடுத்து காந்திபுரம், வடவள்ளி, பொள்ளாச்சி, ஆனைமலை உள்பட மாவட்டம் முழுவதும் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பின்போது முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களின் சீருடையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்