ஊரடங்கு உத்தரவால் ராசா மிராசுதார் மருத்துவமனை முன்பு பரிதவிக்கும் நோயாளிகளின் உறவினர்கள்
ஊரடங்கு உத்தரவால், தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை முன்பு நோயாளிகளின் உறவினர்கள் பரிதவித்து வருகிறார்கள். இரவு, பகலாக அவர்கள் அங்குள்ள நடைபாதையில் காத்துக்கிடக்கிறார்கள்.
தஞ்சாவூர்,
ஊரடங்கு உத்தரவால், தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை முன்பு நோயாளிகளின் உறவினர்கள் பரிதவித்து வருகிறார்கள். இரவு, பகலாக அவர்கள் அங்குள்ள நடைபாதையில் காத்துக்கிடக்கிறார்கள்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாதாரண நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்து வருகிறார்கள். ஏற்கனவே உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை பார்ப்பதற்காக செல்லும் பார்வையாளர்களுக்கும் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் டாக்டர்கள், செவிலியர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதிக பிரசவங்கள்
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைகளுள் ஒன்றாகும். மேலும் இந்த மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டும் மற்ற நோய்களுக்காக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்க்கும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுடன் மற்றும் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டுள்ள பெண்களுடன் ஒருவர் மட்டும் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். முன்பு நோயாளிகள் மற்றும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பார்வையாளர் தங்கும் இடம் மற்றும் மரத்தடியில் தங்குவது வழக்கம்.
காத்துக்கிடக்கிறார்கள்
ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் இரவு, பகலாக ராசா மிராசுதார் மருத்துவமனை முன்பு உள்ள நடைபாதையில் காத்துக்கிடக்கிறார்கள். இதனால் அந்த சாலையில் ஏராளமான இருசக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுடன் தங்கி இருப்பவர்கள் ஏதாவது வேண்டும் என்றால் நடைபாதையில் காத்து கிடப்பவர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்கிறார்கள். அதன்படி இவர்கள் வாங்கி வந்து மருத்துவமனையின் வாயில் முன்பு நிற்கிறார்கள். மருத்துவமனையில் இருப்பவர்கள் வந்து உள்ளே இருந்தபடியே பெற்றுச்சென்று வருகிறார்கள்.
இரவு, பகலாக...
கொரோனா ரைவஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி, சகோதரிகள் எப்படி இருக்கிறார்களோ? என்ற பரிதவிப்பில் இரவு, பகலாக மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கிறார்கள். இந்த மருத்துவமனை முன்பு போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.