கொரோனா தீவிர சிகிச்சைக்கு பலன்: சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 30 பேர் ‘டிஸ்சார்ஜ்’

டாக்டர்கள் வழங்கிய தீவிர சிகிச்சையின் பலனாக கொரோனா தொற்று வேகமாக குணமடைந்து வருகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் 30 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

Update: 2020-04-17 22:55 GMT
சென்னை, 

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் 95 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 30 பேர் உடல்நலம் தேறினர். இதையடுத்து அவர்களுடைய ரத்தம், சளி மாதிரி 2 முறை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு பலனாக கொரோனாவில் இருந்து மீண்ட 30 பேரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் 25 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள். 5 பேர் அவர்களது குடும்பத்தினர் ஆவார்கள்.

அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ கல்வி இயக்குனரும், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி டீனுமான (பொறுப்பு) டாக்டர் நாராயணபாபு தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் கைதட்டி உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு பிஸ்கட், ஜூஸ், பழங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு டாக்டர் நாராயணபாபு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது, ‘நீங்கள் குணம் அடைந்திருந்தாலும் 2 வாரங்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள். வெளியே வராதீர்கள்.’ என்று கூறினார்.

தமிழகத்தில் கொரோனா நோயின் பிடியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பூரண குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்