கஷ்டப்பட்டு விளைவித்த காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை - உழவர்சந்தை விவசாயி குமுறல்
கஷ்டப்பட்டு விளைவித்த காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை என்று உழவர்சந்தை விவசாயி குமுறலுடன் கூறினார்.
நெல்லை,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் வெளியே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதற்கு மேல் வெளியே வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. காய்கறிகள் தங்கு தடையில்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகள் குமுறல்
நெல்லை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் நடமாடும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வீடு, வீடாக சென்று காய்கறி வினியோகம் செய்யப்படு கிறது. ஆனால், கஷ்டப்பட்டு விளைவித்த காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை என்று விவசாயிகள் குமுறுகின்றனர். பாவூர்சத்திரம் சுற்றியுள்ள பகுதியில் தக்காளி அதிக அளவில் விளைச்சல் இருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை. குறைந்த விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். மேலும், நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்கள் அதிக அளவு கேரள மாநிலத்துக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்லும். தற்போது ஊரடங்கு காரணமாக அவை தேக்கம் அடைந்து விட்டதால் போதிய விலை கிடைக்காமல் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து நெல்லையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி சத்தியராஜ் கூறியதாவது:-
எனக்கு திருப்பணி கரிசல்குளம் பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அரைக்கீரை, தண்டு கீரை, பாலக்கீரை, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு உள் ளேன். தினந்தோறும் 40 முதல் 50 கட்டு கீரைகள் மகசூல் கிடைக்கும். அந்த கீரைகளை நெல்லை டவுன் கண்டியப்பேரியில் உள்ள உழவர்சந்தையில் விற்பனை செய்து வருகிறேன்.
மேலும், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை தூத்துக்குடி, சாத்தான்குளம், களக்காடு உள்ளிட்ட ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். ஆனால், போதுமான அளவில் சரக்கு வாகனங்கள் ஓடாததால் அவை தேக்கம் அடைந்து உள்ளன. எனவே, அவற்றை உள்ளூரிலேயே விற்பனை செய்வதால் போதிய விலை கிடைப்பது இல்லை. இது விதைப்பு செலவு, பறிப்புக்கூலி ஆகியவற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் நஷ்டத்துடன் தவிக்கும் என்னை போன்ற விவசாயிகளுக்கு இழப்பு ஏற்றவகையில் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.