கேரளாவை பின்பற்றி கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

கேரளாவை பின்பற்றி கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

Update: 2020-04-18 00:00 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூரு விதான சவுதாவில் தனது அலுவலகத்தில் நேற்று, சுகாதாரத்துறை, கூட்டுறவு, வருவாய், போலீஸ், நிதி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து கொரோனாவை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், கூலித்தொழிலாளர்களுக்கு அரசு வழங்கியுள்ள உதவிகள் குறித்து அதிகாரிகளை வரவழைத்து விவரங்களை கேட்டு அறிந்தேன்.

கொரோனா பரிசோதனை

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை மந்தகதியில் நடக்கிறது. அதனால் கர்நாடக அரசு கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கர்நாடகத்தில் தொடக்கத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்ட உடனேயே மாநில அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து அரசுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கினோம். சட்டசபை கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அரசு இதை கேட்கவில்லை. அதனால் கொரோனா பாதிப்பு இந்த நிலைக்கு வந்துள்ளது.

தொற்று பரவி இருக்காது

கொரோனா நோயாளிகளை கண்டறிய கேரளாவை பின்பற்றுவது சரியாக இருக்கும். அங்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆயினும் அங்கு கொரோனா பரவுவதை தடுத்துள்ளனர். அதனால் அங்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் தற்போது அந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநில அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மைசூரில் உள்ள ஜூபிலியன்ட் நிறுவனத்தில் சீனாவின் சரக்கு பெட்டி மூலம் கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது. ஆனால் அங்கு நடத்திய சோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. தொடக்கத்திலேயே அங்கு கொரோனா பாதித்த முதல் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து இருந்தால் இந்த அளவுக்கு அந்த தொற்று பரவி இருக்காது.

விசாயிகளுக்கு அநியாயம்

தக்காளி, பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரிய அளவில் அநியாயம் ஏற்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பழங்களை வாங்க ஆள் இல்லை. அரசே அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும் என்று நாங்கள் பலமுறை வலியுறுத்திவிட்டோம். ஆனால் அரசு இதை கண்டுகொள்ளவில்லை.”

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்