ஊரடங்கை மீறிய 2,225 பேர் மீது வழக்குப்பதிவு - கலெக்டர் அருண் தகவல்
புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,225 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுவையில் ஏற்கனவே கொரோனா வைரசால் 6 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது 5 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 27 பேர் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,225 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 13,764 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை பழைய பஸ்நிலையம் மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள உழவர் சந்தைக்கு நேற்று 16.6 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வந்தது. தட்டாஞ்சாவடி மற்றும் கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 9 குவிண்டால் நெல், 77 குவிண்டால் பயிறு வகைகளும், 55 குவிண்டால் எண்ணெய் வித்துக்களும் விவசாயிகள் கொண்டு வந்தனர். புதுவை மாவட்டத்தில் நேற்று 150 மெட்ரிக் டன் அரிசியும், ஏனாமில் 60 மெட்ரிக் டன் அரிசியும் வினியோகம் செய்யப்பட்டது.
புதுச்சேரி தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் ஒரு இணைய தகவல் பலகை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார். https://cov-id19das-h-b-o-a-rd.py.gov.in இணையதள முகவரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், குணமானவர்கள், பலியானவர்கள் விவரம், வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.