ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ருசிக்க மறந்த தித்திக்கும் பழனி பஞ்சாமிர்தம்

ஊரடங்கு உத்தரவால் தித்திக்கும் பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்க முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2020-04-17 08:23 GMT
பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் திருக்கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பி பழனி மலையை சுற்றியுள்ள கிரிவீதிகள், அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பஞ்சாமிர்தம், அலங்கார பொருட்கள், பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக பழனி என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது இங்கு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தான். பழனி வந்து செல்வோர் தித்திக்கும் பஞ்சாமிர்தத்தை வாங்க தவறுவதில்லை. சுண்டி இழுக்கும் சுவை கொண்ட பஞ்சாமிர்தம், மலை வாழைப்பழம், பேரீட்சை, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு, தேன் முதலிய மூலப்பொருட்களை கொண்டு தானியங்கி எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. இதுதவிர கோவில் கடைகள், அடிவாரத்தில் உள்ள கடைகளிலும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தினமும் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பங்குனி உத்திர திருவிழாவும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அடிவாரம் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்க முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாதாரண நாட்களில் 15 டன் அளவிலும், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா நாட்களில் 50 டன் அளவிலும் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பங்குனி உத்திர திருவிழாவுக்கு முன்னதாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஞ்சாமிர்த தயாரிப்பு முடங்கியதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

வியாபாரிகள் கூறுகையில், ‘திருவிழாவின்போது பஞ்சாமிர்தம், அலங்கார பொருட்கள், பொம்மைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டது. எனவே இதனை நம்பியிருந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.

மேலும் செய்திகள்