திருச்சி அருகே பரபரப்பு சம்பவம்: கர்ப்பிணியை ஏற்றி வந்தபோது விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது

திருச்சி அருகே கர்ப்பிணியை ஏற்றி வந்தபோது விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-17 06:43 GMT
ஜீயபுரம்,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஆலமரத்துபட்டி கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவருடைய மனைவி சந்திரா. நிறைமாத கர்ப்பிணியான சந்திராவுக்கு பிரசவ வலி ஏற்படவே குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆம்புலன்சை தொட்டியம் பகுதியை சேர்ந்த இளையராஜா(35) என்பவர் ஓட்டினார். அதில், மருத்துவ ஊழியர் தொட்டியம் மணமேட்டை சேர்ந்த பாலமுருகன் (28), சந்திராவின் கணவர் விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேர் இருந்தனர்.

திருச்சி மாவட்டம், ஜீய புரம் கம்பரசம்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, திருப்பூர் மாவட்டம் அவினாசியிலிருந்து திருச்சி பாலக்கரையை சேர்ந்த கர்ப்பிணியை உரிய அனுமதியுடன் காரில் அழைத்து வந்து விட்டு மீண்டும் அவினாசிக்கு சென்று கொண்டிருந்த கார், எதிரே வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியது. காரை திருப்பூரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டினார்.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது அந்த பகுதியில் வசித்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்சில் இருந்தவர்களை மீட்டு மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகிலா, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆம்புலன்சை கிரேன் மூலம் தூக்கி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். கடியாகுறிச்சி அருகே சென்றபோது ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆம்புலன்ஸ் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்