சேலம், நாமக்கல்லில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு - நர்சு, தூய்மை பணியாளரையும் தாக்கிய சோகம்
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் நர்சு, தூய்மை பணியாளரையும் கொரோனா தாக்கி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சேலத்தில், இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் உள்பட 22 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 7 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். மேலும் 16 பேர் ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர வெளிநாடு சென்று வந்தவர்கள், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், இந்தோனேசியா முஸ்லிம் மதபோதகர்கள் சென்று வந்த பகுதியை சேர்ந்தவர்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த தம்மம்பட்டியை சேர்ந்த ஒருவர் மற்றும் வெளிநாடு சென்று வந்த தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் என 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா வைரசில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் 22 பேர் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இன்று (நேற்று) 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 45 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்கள் நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்து உள்ளது. இவர்களில் ஒருவர் நாமக்கல் அருகே உள்ள லத்துவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆவார். மற்றொரு பெண் லத்துவாடியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இதுதவிர நாமக்கல் பிடில்முத்து தெருவை சேர்ந்த 10 வயது சிறுவன், சேந்தமங்கலம் சாலையை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரும், வெண்ணந்தூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவார்கள்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நர்சு, தூய்மை பணியாளர், சிறுவனை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வரை அரசு கண்காணிப்பில் 3 பேர் மட்டுமே இருந்தனர். நேற்று மேலும் 8 பேர் அரசு கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இதனால் அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே நாமக்கல் என்.ஜி.ஓ. காலனிக்கு ‘சீல்’ வைத்து உள்ள போலீசார் அப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.