அரியலூர் மாவட்டத்தில், முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட வங்கிகள் - வாடிக்கையாளர்கள் அவதி

அரியலூர் மாவட்டத்தில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட வங்கிகளால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

Update: 2020-04-17 05:24 GMT
அரியலூர்,

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு மக்களுக்கு சேவையாற்றின. இதனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு சென்று தங்களது சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட அரியலூர் நகரம், செந்துறை மற்றும் திருமானூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 43 வங்கிகளை மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில், நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு பகுதிகளை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன் அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் திடீரென வங்கிகள் மூடப்பட்டதால் கிராமங்களில் இருந்து வங்கிக்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் விவரம் தெரியாமல் வங்கி வாசலிலேயே காத்திருந்தனர். இருவங்கிகளை தவிர மற்ற வங்கிகளில் வங்கிகள் அடைப்பு குறித்த விவரத்தைகூட ஒட்டாமல் வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரம், ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.500 உதவித்தொகை, சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் வழங் கப்படும் மானியத்தொகை ஆகியவற்றை வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தியுள்ளது. இந்த பணத்தை எடுக்க முடியாமல் மூடுப்பட்ட வங்கிகளில் இருந்து திரும்பி செல்பவர்கள் கையில் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடுதிரும்பினர்.

மேலும் செய்திகள்