தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடலாம் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைத்தால் திருப்பத்தூர் மாவட்டம் மிக விரைவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியதாவது:-
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை. மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 17 பேர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா தொற்று பாதித்த 17 பேரின் தொடர்பில் இருந்தவர்களின் விவரம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் 95 சதவீத பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்த உறவினர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. மேலும் 200 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணிக்காக தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்பனை செய்ய வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட பணிகளுக்கு மட்டுமே அவர்கள் அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். தினமும் 15 முறை கைக்கழுவ வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைத்தால் விரைவில் திருப்பத்தூர் மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.