காய்கறி கடைகள் புதிய பஸ்நிலையத்திற்கு மாற்றம்: மக்கள் நடமாட்டமின்றி திருவாரூர் கடைவீதி வெறிச்சோடியது

காய்கறி கடைகள் புதிய பஸ்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி திருவாரூர் கடைவீதி வெறிச்சோடி உள்ளது.

Update: 2020-04-16 22:15 GMT
திருவாரூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அந்தந்த பகுதி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் கடைவீதிக்கு அருகே உள்ள வண்டிக்காரதெரு மற்றும் ஐநூற்று பிள்ளையார் கோவில் தெரு ஆகிய 2 தெருக்களில் 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் 2 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கு வெளி நபர் அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு, மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதி அருகில் கடைவீதி உள்ளதால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் திருவாரூர் புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்து நகராட்சி ஆணையர் சங்கரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து காய்கறி கடைகள் புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் மளிகை கடைகளை மாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. கடைவீதியில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க எந்த கடையையும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால் கடைவீதி செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் கடை வீதியில் கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்