கொரோனா தீவிரத்தை உணராமல் நாட்டை ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? - ஊரடங்கை மீறுபவர்களுக்கு சல்மான்கான் கேள்வி
கொரோனா தீவிரத்தை உணராமல் ஊரடங்கை மீறுபவர்களை நாட்டை ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? என்று நடிகர் சல்மான்கான் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சிலர் ஊரடங்கை மீறுவது குறித்து இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் உருக்கமாக கூறி இருப்பதாவது:-
பொதுமக்களில் சிலர் ஊரடங்கு உத்தரவை மீறுவது வருத்தமளிக்கிறது. நான் 2 நாள் விடுமுறையாக இங்கு வந்தேன். ஆனால் கொரோனா வைரஸ் அனைவருக்கும் விடுமுறை அளித்து விட்டது. முதலில் இது ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போதைய ஊரடங்கு உத்தரவு நிலைமையின் தீவிரத்தை நமக்கு உணர்த்தியுள்ளது.
நிலைமையின் தீவிரத்தை உணராத ஒருவர் முதலில் தனது குடும்பத்திற்கு நோயை பரப்புவார். அத்துடன் நிறுத்தாமல் அவர் இருக்கும் பகுதிக்கும், பின்னர் மொத்த நகரத்திற்கும், அதைத்தொடர்ந்து மொத்த நாட்டிற்கும் அவர் நோய் பரப்பும் வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் நோயின் தீவிரத்தை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.
சாக விரும்புகிறீர்களா?
அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும்படியும் அரசு கூறியுள்ளது. நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் பிரார்த்தனையை செய்யுங்கள். கடவுள் நமக்குள் வசிக்கிறார் என்பதை நாம் சிறுவயதிலேயே கற்றுக் கொண்டுள்ளோம். எல்லோரும் ஒருநாள் சாகத்தான் வேண்டும். ஆனால் தற்போது நீங்கள் சாக விரும்புகிறீர்களா? உங்கள் சொந்த குடும்பத்தையும் இந்த நாட்டையும் ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? அல்லது நமக்காக உழைக்கும் போலீசார் மற்றும் மருத்துவ துறையினருக்கு உறுதுணையாக இருக்க விரும்புவீர்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அல்லது குழுவாகவோ வெளியே செல்லவில்லை என்றால் போலீசார் உங்களை தாக்கி இருக்கமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீங்கள் வெளியில் செல்வதை யாரும் தடுக்கவில்லை.
ஆனால் அப்படி செல்லும்போது கையுறைகள் மற்றும் முக கவசங்களை பயன்படுத்துங்கள்.
நாடு அழிவை நோக்கி...
சுகாதார பணியாளர்கள், போலீசார், வங்கி ஊழியர்கள் போன்றவர்கள் தங்கள் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாமல் நமக்காக உழைக்கின்றனர். ஆனால் நாம் வீட்டிலேயே இருந்து நமது கடமையை ஆற்ற தவறி வருகிறோம்.
வைரஸ் பாதிப்பு உள்ள சிலர் ஆஸ்பத்திரியில் இருந்து ஓடுவதையும் பார்க்க முடிகிறது. நீங்கள் எங்கே ஓடுகிறீர்கள்? வாழ்க்கையை தேடியா அல்லது மரணத்தை நோக்கியா? டாக்டர்களும் போலீசாரும் இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த நாடு நிச்சயம் அழிவை நோக்கி சென்று இருக்கும்.
நிலைமையை மேலும் மோசம் ஆக்கினால் உங்களுக்குப் புரியவைக்க ராணுவம் தேவைப்படகூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.