3 பேருக்கு கொரோனா உறுதி: தனிமைப்படுத்தப்பட்ட திருமங்கலம், வெளி ஆட்கள் உள்ளே வர தடை
திருமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாதபடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருமங்கலம் பகுதியில் சுமார் 13-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர் கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதைதொடர்ந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வார்டுகள் தோறும் சென்று வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக திருமங்கலம் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் அறிவித்து உள்ளார். இதனால் இரவு 8 மணிக்கு மேல் வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வரமுடியாதபடி ராஜபாளையம் ரோடு, சோழவந்தான் ரோடு, விடத்தகுளம் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் தகரம், கம்புகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.