பண்ருட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 2 பேர் வெட்டிக் கொலை - முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

பண்ருட்டியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-04-16 04:29 GMT
பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் விஜி என்கிற விஜயன்(வயது 48). அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவர் விவசாயமும் செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்தில் வாழை, மரவள்ளி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார்.

இவருடைய அண்ணன் ரவியின் மகன் மணிகண்டன்(23). சிற்பி. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மணிகண்டன் தனது நண்பர்களான பாலாஜி(22), தேவநாதன், அப்பு ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு 4 பேரும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியபடி பேசிக்கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் 20 பேர் கொண்ட கும்பல் அரிவாள், வாள், உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து 4 பேரையும் சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவநாதன், அப்பு ஆகிய 2 பேரும் உஷாராகி அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் அந்த கும்பல் மணிகண்டன், பாலாஜி ஆகியோரை சரமாரியாக வெட்டியது. இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதற்கிடையே கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய தேவநாதன், அப்பு ஆகியோர் நடந்த சம்பவத்தை விஜயனிடம் கூறினர்.

இதையடுத்து விஜயன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே பாலாஜி இறந்து விட்டதாக கூறினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டனும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையிலான போலீசார், கொலை நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து தேவநாதன், அப்பு மற்றும் விஜயனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான விஜயன், மணிகண்டன், பாலாஜி ஆகியோர் அ.தி.மு.க. பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். இவர்கள் 3 பேரும் சத்யா பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கட்சி பணியாற்றி வந்தனர். இது அ.தி.மு.க.வில் மற்றொரு தரப்பை சேர்ந்த பாலுவுக்கு பிடிக்கவில்லை.

இதனால் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் எதிர்தரப்பை சேர்ந்த பாலு, கருணாமூர்த்தி, அய்யப்பன், லோகநாதன் உள்பட 20 பேர், மணிகண்டன், பாலாஜியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இரட்டைக்கொலை சம்பவத்தால் பண்ருட்டியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பண்ருட்டி திருவதிகையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் நேரில் சென்று கொலையான இரு குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், இவருடைய மகன் பத்மநாபன், பிரபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பாலு, கருணாமூர்த்தி, லோகநாதன், ராமச்சந்திரன், கிருஷ்ணா என்கிற ராமகிருஷ்ணன், மாரிமுத்து மகன் அய்யப்பன், தீபன் என்கிற திருகுமரன், ஆறுமுகம் மகன் அய்யப்பன், தினேஷ், ஜெயராஜ், பாண்டியன், ஆகாஷ், சதீஷ், ராஜேஷ், சந்தோஷ், மதி என்கிற மதியழகன், குணசேகரன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்