கடலூர் அருகே, போதைக்காக மெத்தனால் குடித்த மேலும் 2 பேர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கடலூர் அருகே மெத்தனால் திரவத்தில் தண்ணீர் கலந்து குடித்ததால் மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-15 22:15 GMT
பரங்கிப்பேட்டை,

கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன்(50), ராமர் மகன் எழில்வாணன்(35), ரவி, ஆணையம்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜ், குமரேசன் ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 6 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி தயார் செய்து வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக குமரேசன் வேலை பார்த்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், இவர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் குமரேசன், தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் பூச்சிக்கொல்லி தயார் செய்ய பயன்படுத்தப்படும் மெத்தனால் என்கிற திரவத்தில் தண்ணீர் கலந்து குடித்தால், அது போதையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் பாட்டிலில் ஒரு லிட்டர் மெத்தனாலை தொழிற்சாலை நிர்வாகத்துக்கு தெரியாமல் வெளியே எடுத்து வந்துள்ளார். கடந்த 13-ந்தேதி இரவு ஆலப்பாக்கத்தில் 6 பேரும் சேர்ந்து மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் 6 பேருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து 6 பேரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சந்திரகாசி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இவர்களில் சுந்தர்ராஜ் உடல் நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாய கிருஷ்ணன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுந்தர்ராஜ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் மெத்தனால் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. எழில்வாணன், ரவி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று குணமடைந்த குமரேசன் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் எடுத்து வந்ததற்காக குமரேசனை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் மெத்தனால் எடுத்து செல்லும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்