கொரோனா தடுப்பு நடவடிக்கை: காந்தல் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காந்தல் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு உள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2020-04-15 22:00 GMT
ஊட்டி,

ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதையொட்டி கொரோனா வைரஸ் பிறருக்கு பரவாமல் தடுக்கும் வகையில் காந்தல் பகுதி கடந்த 1-ந் தேதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இது தவிர குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

ஊட்டி காந்தலில் 7 ஆயிரத்து 216 வீடுகள், குன்னூரில் 6 ஆயிரத்து 605 வீடுகள், கோத்தகிரியில் 5 ஆயிரத்து 932 வீடுகள் என மொத்தம் 19 ஆயிரத்து 753 வீடுகளில் வசிப்பவர்களிடம் சுகாதாரத்துறையினர் அடங்கிய 380 குழுவினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு நடத்தினர். மேற்கண்ட 3 பகுதிகள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து உள்ளது.

இருப்பினும், கொரோனா வைரசின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கையாக 2-வது கட்டமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறது. காந்தல் பகுதிக்கு செல்லும் 7 சாலைகளையும் தடுப்புகள் வைத்து மூடி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களை தன்னார்வலர்கள் வீடு, வீடாக கொண்டு சென்று மக்களுக்கு வழங்கி வரு கின்றனர். தடையை மீறி வெளியே வருபவர்களை போலீசார் விரட்டி அடிக்கின்றனர்.

மேலும் அங்குள்ள புதுநகர், பென்னட் மார்க்கெட், ரோகிணி சந்திப்பு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பழைய தபால் நிலையம், கஸ்தூரிபாய் காலனி, இந்திரா காலனி உள்ளிட்ட இடங்களில் அனைத்து சாலைகள், நடைபாதைகள் தடுப்புகள் வைத்தும், வலைகள் வைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் அவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்களது பெயர் விவரம், வாகன எண்களை போலீசார் பதிவு செய்கின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்