நெல்லை, தென்காசியில் பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெண் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-04-15 23:00 GMT
நெல்லை, 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது.

அவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அங்கு கவச உடை அணிந்த டாக்டர்கள், நர்சுகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லையை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பஞ்சாப் சென்று வந்தார். கொரோனா அறிகுறியுடன் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, டாக்டர்கள் கொரோனா தனிமை வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணின் உறவினருக்கு கொரோனா தொற்று இருந்தது. இதையடுத்து அந்த பெண் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரேனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும் 5 பேர் வீடு திரும்பினர்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 56 பேர் கொரோனா வைரஸ் தொற்று தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 8-ந் தேதி ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். நேற்று முன்தினம் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று மேலும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். அதில் ஒருவர் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்.

மற்ற 4 பேர் நெல்லை டவுனை சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை மொத்தம் 19 பேர் வீடு திரும்பி உள்ளனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்