வாலிபருக்கு கொரோனா தொற்று என போலீசாருக்கு பொய்யான தகவல்; பெண் மீது வழக்குப்பதிவு

வாலிபருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக போலீசாருக்கு பொய்யான தகவல் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-04-15 19:30 GMT
அம்மாபேட்டை, 

அந்தியூரை சேர்ந்த பெண் ஒருவர், தனது போனில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறை இலவச எண் 100-யை தொடர்பு கொண்டு பேசினார். போலீசாரிடம் அவர், ‘அம்மாபேட்டை பகுதியில் குடியிருக்கும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியே சுற்றி திரிகிறார். இதனால் மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதன் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய பெண்ணுக்கும், அவர் புகார் கூறிய வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த வாலிபர் பெண்ணுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பெண் கட்டுப்பாட்டு அறையை போனில் தொடர்பு கொண்டு பொய்யான தகவல் அளித்துள்ளார்’ என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்