புதுச்சேரி மாநில எல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தடுத்து நிறுத்தம் - போலீசார் விடமறுத்ததால் பரபரப்பு
புதுவை மாநில எல்லையில் போலீசாரால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தடுத்து நிறுத்தப்பட்டார். போலீசார் அவரை விட மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வரும் வாகனங்கள் தவிர மற்ற வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் புதுவைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மாநிலத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளும் மற்றும் சிறு வழிப்பாதைகளும் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
புதுவை- கடலூர் சாலையில் முள்ளோடை நுழைவாயிலில் இருபுறமும் போலீசார் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரவு சுமார் 7 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது காரில் கடலூரில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக புதுச்சேரிக்குள் நுழைய முயன்றார். இதைப்பார்த்ததும் முள்ளோடை எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என். போலீசார் மற்றும் புதுவை போலீசார் அவரது காரை மறித்து நிறுத்தினர்.
இதையடுத்து போலீசாரிடம் தன்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என கே.எஸ். அழகிரி அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால் அதன்பிறகும் அவரது காரை போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி புதுச்சேரி அமைச்சர் கந்தசாமியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு போலீசார் தனக்கு வழிவிட மறுப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
மறுமுனையில் பேசிய அமைச்சர் கந்தசாமி அங்கிருந்த போலீசாரிடம் செல்போனை தரும்படி சொன்னார். அதன்படி கே.எஸ்.அழகிரியும் அங்கிருந்த போலீசாரிடம் செல்போனை கொடுத்தார். ஆனால் போலீசார் அதை வாங்கி பேச மறுத்து விட்டனர். அதையடுத்து அமைச்சர் கந்தசாமி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பின் கே.எஸ்.அழகிரி காரை போலீசார் புதுச்சேரிக்குள் அனுமதித்தனர். பின்னர் அவர் புதுச்சேரி வழியாக சென்னைக்கு சென்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின்போது புதுவை எல்லையான முள்ளோடை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையே தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.