ஊரடங்கால் மக்காச்சோள பயிரை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
ஆலங்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரத்தில் ஆலங்காடு, பள்ளத்தி விடுதி, சிக்கப்பட்டி, காட்டுப்பட்டி, ராசியமங்கலம் போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். சோளக்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் பயிரிட்டுள்ள கதிர்களை கடந்த மார்ச் மாதமே அறுவடை செய்திருக்க வேண்டும் ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சோளக்கதிர் அடிக்கும் எந்திரங்கள் கிடைக்கவில்லை. மேலும் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சப்பட்டு வேலைக்கு வரவில்லை. ஏப்ரல் 14-ந் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிந்து விடும். பின்னர் சோளம் அறுவடை செய்யலாம் என்று விவசாயிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சோளப்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் விளைந்த கதிர்களை மயில், காகம் போன்றவை தின்று அழித்து வருகிறது. கதிர்களை பாதுகாக்க வழியில்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். மேலும் விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.