சமுதாய நலக்கூடம், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேருக்கு தினமும் ருசியான உணவுகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் ருசியான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2020-04-14 23:30 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமானோர் சென்னையிலேயே முடக்கப்பட்டனர். இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையத்தில் காத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்க வைத்தனர்.

மேலும் சாலையோரங்களில் ஆதரவின்றி தங்கியிருந்தவர்கள் என அனைவரையும் மீட்டு காப்பகங்களில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் மாநகராட்சி காப்பகங்கள், சமுதாய நலக்கூடங்கள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் என 96 இடங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 260 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ருசியான உணவுகள்

சமுதாய நலக்கூடங்கள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு 3 வேளைகளும் சுவையான உணவுகள், உடைகள் மற்றும் தூங்குவதற்கு பாய், போர்வைகள் என அனைத்தும் மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இங்கு இருப்பவர்களுக்கு, இட்லி, பொங்கல், சேமியா உப்புமா, கிச்சடி, ரவா உப்புமா, தயிர் சாதம், சாம்பார் சாதம், ரவா கிச்சடி, சாதத்துடன் சாம்பார், ரசம், பொரியல் மற்றும் தோசை, சப்பாத்தி என தினமும் ருசியான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு 30-ந்தேதி வரை உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்