The sun shines on the lingam at Thirunar Annamalai temple
திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலை கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. ஊரடங்கை மீறி பூஜை நடத்திய குருக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் உள்பட அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1-ந் தேதியன்று காலையில் திருநேர் அண்ணாமலை கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்ததும் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால் ஒரு இடத்தில் மக்கள் கூடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தது தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி கோவிலை திறந்து பூஜை நடத்திய கோவில் குருக்கள் ரத்னகுமார், சிவானந்தம் ஆகியோர் மீது திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.