மோட்டார் சைக்கிள் திருடிய புகாரில் வாலிபர் அடித்து கொலை - 4 கல்லூரி மாணவர்கள் கைது
சென்னையில், மோட்டார் சைக்கிள் திருடிய புகாரின் பேரில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 20). இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3-வது ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது தொடர்பாக ராமச்சந்திரன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொலைந்து போன மோட்டார் சைக்கிளை ராமச்சந்திரன் தானே நேரடியாக களத்தில் இறங்கி தேடினார். போரூரைச் சேர்ந்த ஒருவர், காட்டுப்பாக்கத்தில் ராமச்சந்திரனின் மோட்டார் சைக்கிளை ஆகாஷ் என்பவர் வைத்திருந்ததை பார்த்ததாக தெரிவித்தார்.
அடித்து கொலை
உடனே ராமச்சந்திரன் தனது நண்பர்கள் அபிஷேக், தீனா, சந்தோஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஆகாசை (20) தேடிப்பிடித்தார். ஆனால் ஆகாஷிடம் மோட்டார் சைக்கிள் இல்லை. அவரிடம் உண்மையை வரவழைக்க திட்டமிட்டனர். ராமச்சந்திரன் கே.கே. நகரில் உள்ள தனது வீட்டுக்கு ஆகாசை அழைத்து வந்தார். அங்கு ஒரு அறையில் கட்டி வைத்து ஆகாசை கட்டையால் அடித்து உதைத்தனர். இதில் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவும் செய்தனர்.
கைது
ஆகாஷ் கொலைக்கு காரணமான ராமச்சந்திரன், அவரது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் தீனா, அபிஷேக், சந்தோஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.