சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 உடனடி அபராதம் - சாலையில் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 உடனடி அபராதம் விதித்தும், சாலையில் காரணமின்றி சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-04-14 22:52 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று தொற்றுநோய் மற்றும் பொது சுகாதார சட்டங்களின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கண்டிப்புடன் போலீசார்

நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதையொட்டி அத்தியாவசிய பொருட் களை வாங்குவதற்காக காலை முதலே மக்கள் வெளியில் வர ஆரம்பித்தனர்.

இதில் பலருக்கு, முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட விஷயம் தெரியவில்லை. இன்னும் சிலரோ சென்னை மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் சாலைகளில் உலா வந்தனர்.

சென்னை அண்ணா சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முக கவசம் அணிவது தொடர்பான உத்தரவை மிகவும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினர்.

முக கவசம் அணிவித்து அறிவுரை

அதன்படி முக கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு போலீசார் ரூ.500 உடனடி அபராதம் விதித்தனர். அதேபோல் சாலையில் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜூன் 1-ந் தேதிக்கு மேல் வந்து வாகனங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

அதே சமயம் ஒரு சில இடங்களில் முக கவசம் அணியும் விவகாரத்தில் பொதுமக்களிடம் போலீசார் சற்று கனிவுடன் நடந்து கொண்டனர்.

முதல் நாள் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் என்பது தெரியாமல் இருக்கலாம் என்று கருதி, முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அவர்களே முக கவசங்களை அணிவித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்