திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர்களுக்கு தேவையான வசதிகள் செய்துதரப்படும் - சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்ற மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி மங்கத்ராம் சர்மா தெரிவித்தார்.

Update: 2020-04-14 22:15 GMT
திருப்பத்தூர், 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கான மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி மங்கத்ராம்சர்மா திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிவன்அருளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மூடப்பட்டுள்ள ஆலங்காயம் சாலையை பார்வையிட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு வார்டுக்கு சென்று டாக்டர்களுக்கு தேவையான முழுகவச உடை உள்ளதா, தேவையான அளவு மருந்து மாத்திரை, வென்டிலேட்டர் உள்ளதா, நோயாளிகளுக்கு என்னனென் தேவை என மருத்துவ அலுவலர் திலீபனிடம் கேட்டறிந்தார்.

கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம் வெளியில் உள்ள மானிட்டரில் பார்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம். டாக்டர்களுக்கு தேவையான கவச உடை, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தரப்படும். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை அறை தயார் நிலையில் உள்ளது என்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டாக்டர்கள் பி.பிரபாகரன், கே.டி.சிவக்குமார், மனோஜ்குமார், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் புதுப்பேட்டை அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப் படுபவர்கள் தங்க வைக்கப்படும் இடங்களை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்