கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 1,650 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் தயார் - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க திருப்பூர் மாவட்டத்தில் 1,650 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கும் பணி தொடர்ந்து வருகிறது. அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள வீதிகள், பகுதிகளை சேர்த்து மொத்தமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு மண்டலங்களாக 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம். அத்தியாவசிய பொருட்கள் அந்த பகுதிகளுக்கு எடுத்து சென்றால் கூட தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளை சுற்றியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்தம்,சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
டெல்லி சென்று வந்தவர்கள் அனைவருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவு வந்து விட்டது. இதைத்தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கு மாதிரி எடுத்து அனுப்பி வைக்கப்பட்டு அதன் முடிவுகளும் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினர் தொடர்புவைத்தவர்களுக்கும் மாதிரி எடுத்து அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று(நேற்றுமுன்தினம்) மட்டும் 300 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்று(நேற்று) 1,000 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. இவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மண்டல பகுதியில் தொடர்ச்சியாக மாதிரி எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். ஒருவேளை அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் வகையில் 1,650 படுக்கைகளுடன் அரசு மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் மாவட்டத்தில் பல பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சென்று வந்தவர்களில் குடும்பத்தினருக்கு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு பிறகு கூட 43 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த போலீசார், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட செவிலியர்கள், டாக்டர்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் என ஒவ்வொருவரின் தொடர்புகளையும் மிகவும் நுணுக்கமாக கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த துறை மூலமாகவும் பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதை எவ்வாறு படிப்படியாக செய்வது, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் அவர்களை தொடர்பில் வைப்பது, பனியன் நிறுவனத்துக்கு கீழ் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்வது குறித்து பனியன் நிறுவன தொழில்துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. பனியன் நிறுவனங்களில் சிறிய பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் துணி முககவசம் மற்றும் சாதாரண முககவசங்களை பயன்படுத்தலாம். டாக்டர்கள், செவிலியர்கள் தான் என்.95 உள்ளிட்ட முககவசங்களை பயன்படுத்துகிறார்கள். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கட்டாயம் முககவசம் அணிந்து தான் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.