ஊரடங்கால் வேலை இழப்பு: சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்

ஊரடங்கால் வேலை இழந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் 13 மோட்டார் சைக்கிள்களில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை கயத்தாறு அருகே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Update: 2020-04-14 23:00 GMT
கயத்தாறு, 

ராஜஸ்தான் மாநிலம் பில்வேரா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி பகுதியில் வாடகை வீடுகளில் தங்கியிருந்து, குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல முடிவு செய்தனர்.

தற்போது ரெயில்கள் இயக்கப்படாததால், அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு புறப்பட்டனர். மொத்தம் 13 மோட்டார் சைக்கிள்களில் 6 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 36 பேர் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

காலை 6 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி நாற்கரசாலை சோதனைச்சாவடியில் சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்துக்கு மோட்டார் சைக்கிள்களில் பயணிக்க அனுமதிக்க முடியாது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

திருப்பி அனுப்பினர்

இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன் மற்றும் போலீசார் இணைந்து, வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு பொட்டலம், பிஸ்கட், முககவசம் போன்றவற்றை வழங்கினர். பின்னர் கன்னியாகுமரி மாவட்ட போலீசாரை வரவழைத்து, அந்த தொழிலாளர்களை மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள அவர்களது வீடுகளுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கால் வேலை இழந்து பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிள்களில் ராஜஸ்தானுக்கு புறப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்