வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் சம்பங்கி பூச்செடிகளை டிராக்டரால் உழுது அழிக்கும் விவசாயிகள்
வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் சம்பங்கி பூச்செடிகளை விவசாயிகள் டிராக்டரால் உழுது அழிக்கின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம், அம்மாபாளையம், லாடபுரம், மலையாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சம்பங்கி பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். சம்பங்கி பூக்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. தற்போது ஊரடங்கு உத்தரவால் பூ மார்க்கெட்டுகள் செயல்படவில்லை. இதன் காரணமாக பூ வியாபாரிகள், விவசாயிகளிடம் பூக்களை கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனர்.
மேலும் கோவில் திருவிழாக்கள், சுபகாரியங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பூக்களின் தேவையும் குறைந்து விட்டது. இதையடுத்து விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விட்டனர். சில இடங்களில் பூக்களை பறிக்க கூலி ஆட்கள் வராததால், விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் சம்பங்கி பூக்களை பறித்து, கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர்.
மேலும் சில விவசாயிகள் டிராக்டர் மூலம் பூச்செடிகளை உழுது அழித்து வருகின்றனர். இதுகுறித்து துறைமங்கலத்தை சேர்ந்த விவசாயி சோளமுத்து கூறுகையில், நான் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் சம்பங்கி பூச்செடிகளை ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தேன். அதற்கு இதுவரை ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளோம். தற்போது பூக்களை விற்க முடியாமல் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கிறோம். மீதமுள்ளவற்றை சாலையில் கொட்டுகிறோம். சில சமயங்களில் சம்பங்கி பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளேன். தற்போது ஒவ்வொரு பகுதியாக டிராக்டர் மூலம் சம்பங்கி பூச்செடிகளை உழுது அழித்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு பூ மார்க்கெட்டில் 1 கிலோ சம்பங்கி பூ ரூ.100-க்கும், சுபமுகூர்த்த நாட்களில் ரூ.250 வரை விற்பனையானது. லாபம் பார்க்கலாம் என நினைத்து பெரிய தொகையை செலவழித்து சம்பங்கி பூச்செடிகளை வளர்த்த விவசாயிகளுக்கு ஊரடங்கு உத்தரவால் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே மத்திய, மாநில அரசுகள் சம்பங்கி பூக்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், என்றார்.