ஊரடங்கை பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மந்திரி அனில் தேஷ்முக் எச்சரிக்கை
ஊரடங்கை பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் எச்சரித்து உள்ளார்.
மும்பை,
உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் அரக்கன் மராட்டியத்தை புரட்டி எடுத்து வருகிறான். எனவே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை மேலும் 16 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மராட்டியத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் மேலும் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
மந்திரி எச்சரிக்கை
இதுபோன்ற பெண்களுக்கு எதிரான அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஊரடங்கை பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. ஊரடங்கை கண்காணிப்பதில் போலீசார் மிகவும் தீவிரமாக இருப்பதாக கருதி வக்கிரபுத்தி கொண்டவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். நம்மிடம் வலுவான சட்டங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.