ஈரோட்டில் கொரோனா சிறப்பு வார்டு ரெயில் தயார்

ஈரோட்டில் கொரோனா சிறப்பு வார்டு ரெயில் தயாராக உள்ளது.

Update: 2020-04-13 22:00 GMT
ஈரோடு, 

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அதிக மக்கள் பாதிப்படைந்தால் அவர்களை தனிமைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. தனிமைப்படுத்த ஆஸ்பத்திரி போன்ற பெரிய கட்டிடங்கள் மட்டுமின்றி, இந்திய ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில் பெட்டிகளும் தனிமைப்படுத்தும் சிறப்பு கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாற்றப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு ரெயில் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஈரோடு ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தனிமைப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் அப்போது தாமதிக்கக்கூடாது என்று இந்த ரெயில் முன்எச்சரிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு ரெயில்வே போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர். இந்த சிறப்பு வார்டு ரெயில் மூலமாக 160 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரிகளில் சுமார் 100 பேர் தனிமைப்படுத்துப்பட்டு இருக்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. இவர்கள் தவிர வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் சுமார் 1,000 பேர் உள்ளனர். இதற்கிடையே பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி 184 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டு, தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. நிலமை தீவிரமாகும் முன்பு நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்