அரசியல் பிரமுகருக்கு கொரோனாவா? நைனார் மண்டபத்தில் திடீர் பரபரப்பு

புதுச்சேரியை சேர்ந்த அரசியல் பிரமுகருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறையினர் அவரை பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக நைனார்மண்டபம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-13 09:49 GMT
புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் இந்த உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரியை பொருத்தவரை டெல்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை நைனார் மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் முஸ்லிம் மாநாட்டுக்கு சென்றவர்கள் திரும்பிய விமானத்தில் பயணம் செய்திருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் அந்த நபரை சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த கடைகள் மூடப்பட்டன. ஏற்கனவே ஒரு முறை அவர் சோதிக்கப்பட்டு வைரஸ் தொற்று இல்லை என்று முடிவு வந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இருந்த போதிலும் தனிமைப்படுத்தப்பட்ட அவர் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளார்.

மேலும் செய்திகள்