கொரோனாவால் 2 பேர் இறந்ததாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய எலக்ட்ரீசியன் கைது - நாமக்கல் போலீசார் நடவடிக்கை
கொரோனாவால் 2 பேர் இறந்ததாக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பரப்பிய எலக்ட்ரீசியனை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல்லில் உள்ள சந்தைபேட்டை புதூர் சின்னண்ணன் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). எலக்ட்ரீசியன் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார்.
அதில் சின்னண்ணன் தெருவில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 4 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியதாகவும், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர்களில் 2 பேர் மரணம் அடைந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அழிப்போம் என்பது போன்ற வன்முறை வாசகங்களும் இடம் பெற்று இருந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட எலக்ட்ரீசியன் வரதராஜனை கைது செய்தனர்.
உயிருடன் இருக்கும் நபர்களை கொரோனாவால் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பரப்பிய சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.