மாயமான 2 பேரும் மின்வேலியில் சிக்கி பலியான பரிதாபம்: போலீசுக்கு பயந்து உடல்கள் புதைப்பு; விவசாயி உள்பட 2 பேர் கைது - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
திருக்கோவிலூர் அருகே வேட்டைக்கு சென்று மாயமான 2 பேரும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள். போலீசுக்கு பயந்து உடல்களை புதைத்த விவசாயியையும், 2 பேர் இறந்தததை போலீசுக்கு தெரிவிக்காத கல்லூரி மாணவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லுார் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்னு மகன் சுபாஷ்(வயது 22). இவர் தனது சகோதரியின் கணவரான தென்காசி மாவட்டம் சாமியார் மடத்தைச் சேர்ந்த அண்ணாமலை(36) என்பவருடன் சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இருவரும் அருணாபுரத்துக்கு வந்தனர். அங்கு கடந்த மாதம் 28-ந்தேதி இருவரும் முயல்வேட்டைக்காக மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள காட்டுக்கு சென்றனர். ஆனால் வெகுநேரமாகியும் இருவரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் இருவரையும் அவர்களின் உறவினர்கள் தேடி காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கே சுபாசுக்கு சொந்தமான வயல்வெளி கொட்டகையில் அவரது மோட்டார் சைக்கிளும் செல்போனும் இருந்தது. ஆனால் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தார்.
ஆனால் 15 நாட்களாகியும் 2 பேர் மாயமான வழக்கில் துப்பு துலங்காமல் இருந்ததால் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், பாண்டியன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் சுபாஷ் மற்றும் அண்ணாமலையுடன் அதே ஊரைச்சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ் (19) என்பவரும் முயல் வேட்டைக்கு சென்றிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் கோகுல்ராஜிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று முயல்வேட்டைமுடிந்து 3 பேரும் வீட்டுக்கு திரும்பி வரும் போது, கிருஷ்ணமூர்த்தி என்பவரது வயலில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறித்தோம். மாங்காய் பறித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது திடீரென சுபாஷ் என்னை காப்பாத்துங்க என்ற சத்தம் போட்டார். உடனே அவரது மாமா அண்ணாமலை ஓடிப்போய் சுபாஷை காப்பாற்ற முயன்றார். நான் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது 2 பேருமே மின்வேலியில் சிக்கி இறந்தது தெரிந்தது. நான் உடனே வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன். ஆனால் இரவில் என்னால்தூங்க முடியவில்லை. மறுநாள் காலையில் காட்டுக்கு சென்று 2 பேரும் இறந்த இடத்தில் பார்த்தபோது 2 பேரின் உடல்களையும் காணாமல் திடுக்கிட்டேன். இதனை வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் எள் வயலுக்கு மின்வேலி அமைத்திருந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து துருவித்துருவி விசாரித்தனர். ஆனால் முதலில் உண்மையை சொல்ல மறுத்த அவர், பின்பு கோகுல்ராஜ் சொன்ன தகவல்களை ஒப்புக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த தகவலின்படி போலீசார் நேற்று அவரது எள் வயலுக்கு சென்று 2 பேரின் பிணத்தையும் புதைத்த இடத்தை காண்பித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் கண்டாச்சிபுரம் தாசில்தார் ஜெயலட்சுமி, தடவியல் நிபுணர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்டிருந்த சுபாஷ் மற்றும் அண்ணாமலையின் பிரேதங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்திருந்த டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் உடலை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த சுபாஷின் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து, அதில் சிக்கி இறந்து போனவர்களின் உடல்களை புதைத்ததற்காக விவசாயி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி அம்சவள்ளி ஆகியோர் மீதும், நடந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். வேட்டைக்கு சென்ற மாமன்-மைத்துனர் மாயமான சம்பவம் இப்பகுதியில் கடந்த நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மின்வேலியில் சிக்கி இறந்துபோனது தெரியவந்ததும், அது யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதும் திருக்கோவிலுார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.