மீண்டும் பனை தொழிலுக்கு மாறிய தொழிலாளர்கள் - பதநீர், நுங்கு வியாபாரம் ஜோர்
பனைதொழிலை கைவிட்டு வேறு தொழில் சென்றோர் மீண்டும் பனைதொழிலில் இறங்கியுள்ளனர். டீக்கடை, குளிர்பான கடைகள் இல்லாத சூழலில் பதநீர், நுங்கு வியாபாரம் ஜோராக நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள செண்பகத்தோப்பு, மம்சாபுரம், சாலியன்தோப்பு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனைகள் உள்ளன. கடந்த காலங்களில் இங்கு பனை தொழில் சுறுசுறுப்பாக நடந்து வந்தது. இதற்காகவே ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.
பனை வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து இங்கு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் 200 மில்லி அளவில் பதநீர் பாக்கெட் தயாரித்து ரூ.15-க்கு விற்கப்படுகிறது. காலப்போக்கில் பனைதொழிலை தொழிலாளர்கள் பலர் புறக்கணித்தனர். நுங்கு வியாபாரம் மட்டும் ஓரளவுக்கு நடந்து வந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவால் பிற தொழில் செய்து வந்தோர் வேலை இழந்து விட்டார்கள். வெளியூருக்கு சென்று வேலை பார்த்த தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு வந்து தவிக்கின்றனர். இதனால் பலர் மீண்டும் பனை மரம் ஏறும் தொழிலை தொடங்கியுள்ளனர். பதநீர் இறக்குவதோடு நுங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி நார் தயாரிப்பு, பிரஸ் தயாரிப்பு போன்ற வேலைகளை செய்ய தொடங்கி உள்ளனர்.
மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரமான காலை வேளைகளில் ஏராளமானோர் நுங்கு மற்றும் பதநீர் கொண்டுவந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்கின்றனர். கோடைவெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி டீக்கடைகளும், குளிர்பான கடைகளும் மூடிக்கிடப்பதால் இவற்றின் வியாபாரம் கன ஜோராக நடந்து வருகிறது. இதனால் நுங்கு விற்பனையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.