சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் ஒன்று கூடி வீடியோ வெளியிட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு
சேவூர் அருகே சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் ஒன்று கூடி வீடியோ வெளியிட்ட பொதுமக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேவூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியே வரும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி பிச்சாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா நோய் தொற்றை பரவச் செய்யும் வகையில் கிராமத்தில் ஒன்றாக கூடி நின்று உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார் சேவூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பிச்சாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர், ஊரடங்கு உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒன்றாக கூடி நிற்கிறார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதன் பேரில் சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.