தென்காசியில் மேலும் ஒருவருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அந்த மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி,
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித உயிர்களை இரையாக்கி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.