பாய் பின்னும் தொழிற்கூடங்கள் மூடல்: அறுவடையான கோரைப்புல் வீணான அவலம்

கரூரில் பாய் பின்னும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், அறுவடையான கோரைப்புல் வீணாகி வருகிறது.

Update: 2020-04-11 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் நன்னியூர், செம்மடை, செவ்வந்திபாளையம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாய் தயாரிப்பதற்கான கோரைப்புற்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவைகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நன்னியூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா ஊரடங்கினால் பாய் பின்னும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், கோரைப்புற்களை கொள்முதல் செய்து பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட கோரை புற்களும் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது தொடர்பாக கோரைப்புல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், கரூர் மாவட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கோரைப்புற்களானது கரூர் மட்டுமல்லாது கயத்தாறு, பத்தமடை, வந்தவாசி, வாணியம்பாடி, ஓமலூர் ஆகிய பாய் பின்னும் தொழிலுக்கு பெயர் பெற்ற ஊர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கட்டு கோரைப்புற்கள் ரூ.1,000 வரையில் விலை போகிறது. பின்னர் அதனை தறியில் வைத்து நெய்து படுத்து உறங்குவதற்கு ஏற்ற வகையில் பாயாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். தற்போது பாய் பின்னும் கூடங்கள் மூடப்பட்டதால் கோரைப்புற்கள் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்கி மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றனர்.

நாம் கடைகளில் ரூ.75, ரூ.100 ஆகிய விலையில் ஒரு கோரைப்பாயை வாங்கினால் குறைந்தபட்சம் 6 மாத காலமாவது பயன்படுத்துகிறோம். எனவே ஆயிரக்கணக்கில் செலவு செய்து பல்வேறு விரிப்புகளை வாங்குவதை காட்டிலும், கோரைப்பாய்க்கு என தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. தற்போது திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்திருப்பதால் பாய் விற்பனை ஆர்டர்கள் குறைந்துள்ளது. பாய் பின்னும் கூடத்தின் தொழிலாளர்களும் வேலையிழந்து தவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட அரசு வழிவகை செய்ய வேண்டும் என நன்னியூர் பாய் பின்னும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்