மேக்காமண்டபத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு - அதிகாரிகள் நடவடிக்கை
மேக்காமண்டபத்தில் சமூக விலகலை பின்பற்றாத 2 கடைகளுக்கு ‘சீல்‘ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அழகியமண்டபம்,
கொரோனா பரவலை தடுக்க குமரி மாவட்டத்தில் பல்வேறு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் போலீசார் மற்றும் அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகிறார்கள். அப்போது, யாரேனும் கொரோனா உத்தரவை மீறி பொதுமக்களை கூட்டமாக நிற்க வைத்து வியாபாரம் செய்தால் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி உத்தரவுபடி கல்குளம் தாசில்தார் ஜெகதா மற்றும் போலீசார் மேக்காமண்டபம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 2 கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கூட்டமாக நின்றனர். கொரோனா குறித்து எந்தவொரு அச்சமும் இல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொறுப்பற்ற முறையில் முண்டியடித்தபடி இருந்தனர். மேலும் கடை உரிமையாளரும் இதனை கண்டு கொள்ளவில்லை.
இதனால் சமூக இடைவெளியை பின்பற்றாத அந்த 2 கடைகளுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. மேலும் கூட்டமாக நின்ற பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.