கொரோனா பிரச்சினையில் ‘கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது தவறல்ல’ - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்
கொரோனா பிரச்சினையில் கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது தவறல்ல என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினைகள் குறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. சில கவர்னர்கள் அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும், அவர்கள் முதல்-மந்திரிகள் மூலமாக அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கூறியிருந்தார்.
இது குறித்து மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-
நம் மீது மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் கவர்னர் சும்மா இருக்க முடியாது. அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்துவதால் முதல்-மந்திரியின் அதிகாரம் பாதிக்கப்படாது. அரசியலமைப்பு கவர்னருக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளது. எனவே 2 அதிகார மையங்கள் உருவாக்கப்படுவதாக கவர்னருக்கு எதிராக சிலர் முன் வைத்த குற்றச்சாட்டுகள் தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது தவறல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.